கடலூர் அருகே, கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் நெத்தனாங்குப்பம் பிரியும் ரோடு அருகே சென்ற போது, அந்த வழியாக சென்ற மொபட் மீது மோதி சென்று சாலையோர மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஜோதி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து விபத்தில் காயமடைந்த ஜோதி நஷ்ட ஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஜோதிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 89 ஆயிரத்து 165 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை. தொடர்ந்து ஜோதி தரப்பில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்ததில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்ல முயன்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.