மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரிமளரெங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரெங்கம் என்று பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது அரங்கமாக இந்த பரிமள ரங்கநாதர் கோவில் திகழ்கிறது.
மேலும் இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன் வழிபட்டதாக கூறப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவிலில் இருந்து வாணவேடிக்கையுடன் பெருமாள், தாயாருடன் கோவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தெப்பக்குளத்தில் தெப்பம் 3 சுற்றுக்கள் சுற்றி வந்தன. பின்னர் நிலையை வந்தடைந்தது. இந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.