மயிலாடுதுறை, மார்ச்- 31;
மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இளைஞர், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்த கூடிய வகையில் 50 இடங்களில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட தருமபுரம் சாலை ராஜன்தோட்ட பகுதியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.2.00 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இத்திட்டம் இளைஞர்கள், மகளிர்கள், குழந்தைகள் அறிவை வளர்க்ககூடிய திட்டமாகும். குழந்தைகளுக்கு அறிவை மேம்படுத்தக்கூடிய தொடுதிரை, ஒலி அமைப்பு போன்ற கருவிகளுடன் இங்கு வரஉள்ளது, இளைஞர்களுக்கு போட்டித்தேர்வை எதிர்கொள்ள இது ஒரு பயனுள்ள திட்டமாகும். இளைஞர்கள் குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டி தேர்வுகளுக்கு இங்கு படிப்பதற்குண்டான அனைத்து புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்படும், இதே திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் ரூ.2.00 கோடி மதிப்பில் வர உள்ளது.
ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இதில் சுமார் 2000 மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அறிவுசார் மையம் 5000 ச.அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது. மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை திறம்பட அமைத்திட இந்நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பயனுள்ளதாக இருக்கும். அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு வகையில் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
இந்த அறிவுசார் மையத்தில் மாணவ, மாணவிகள் படிக்கும் அறைகள், சிறுவர்கள் படிக்கும் அறைகள், பொதுமக்கள் படிக்கும் அறைகள், இணையதள வசதியுடன் கூடிய, கணினி அறை, கணினி உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்கும் அறை, சிறுவர்கள் விளையாட வசதிகள், போன்ற வசதிகளுடன் இங்கு அமைய உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் விரைவில் வர உள்ளதென செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.