மயிலாடுதுறை அருகே அருவாப்பாடி, ஊராட்சி வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்குவதற்கான கிடங்கை ஏற்படுத்தி 9 ஆயிரம் ராட்சத குழாய்களை இறக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த குழாய்களை மிகப்பெரிய லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் தலைமையில் ராட்சத குழாய்கள் இறக்கும் பணி நடக்கும் இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமலும், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும், ராட்சத குழாய்களை இறக்கி வருவதாகவும், இந்த குழாய்களை தங்கள் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ராட்சத குழாய்கள் இறக்குகிறோம் என்ற பெயரில் எண்ணெய் எடுக்கும் பணியை தொடங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.