வடலூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கருங்குழி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மேட்டுக்குப்பம் வள்ளலார் தீஞ்சுவை நீரோடை அருகே நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டபுரத்தை சேர்ந்த சதாசிவம் மகன் ராமசாமி (வயது 53), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அம்மேரிபாளையத்தை சேர்ந்த சுப்புராஜ்(52), கணேசன்(54), சரவணகுமார்(25), கணேசன் மனைவி பார்வதி(52) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது ராமசாமி போலீசில் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வந்தேன்.
அப்போது கருங்குழி கிராமத்தை சேர்ந்த தமிழ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நான் என்னிடம் போலி ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதனை மாற்றிக் கொடுக்க உதவுமாறு கேட்டேன்.
அதற்கு தமிழ், தனக்கு தெரிந்த சாத்தூர் பகுதியை சேர்ந்த சுப்புராஜ், கணேசன், அவரது மனைவி பார்வதி, சரவணக்குமார் ஆகியோர் மூலம் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி அவர்களை வரவழைத்தார்.
பின்னர் நாங்கள் 500 ரூபாய் நோட்டுகள் 6 தாள்களில் கருப்பு மை பூசி வைத்தோம். மீதி 500 ரூபாய் நோட்டு அளவுகளில் 112 கருப்பு தாள்களை வெட்டி எடுத்துக் கொண்டோம். தொடர்ந்து பொதுமக்களிடம் சென்று, முதலில் மை தடவிய 500 ரூபாய் நோட்டுகளை காண்பித்து, அதனை ரசாயனம் கலந்த தண்ணீரில் விட்டு எடுத்தால் உண்மையான ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என நம்ப வைத்து, அந்த 112 கருப்பு பேப்பரையும் ஏமாற்றி கொடுத்து பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டோம் என்றார்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, கணேசன், சுப்புராஜ், பார்வதி, சரவணக்குமார் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய தமிழை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.