மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று மூடப்பட்டது.இதேபோல கொள்ளிடம் அருகே உள்ள எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வரும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எடமணல் ஆரம்ப சுகாதார நிலையமும் நேற்று மூடப்பட்டது.
இதையடுத்து மாங்கனாம்பட்டு, எடமணல் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கொள்ளிடம் பகுதியில் இயங்கி வந்த இரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் மூடப்பட்டதால், தினந்தோறும் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.