அடகு வைத்த நகைகளை விட அதிக நகை வைக்கப்பட்டதாக கூறி நகை கடன் தள்ளுபடி செய்ய மறுத்தது மட்டுமின்றி அவரது கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நகை இல்லை என்று சங்க நிர்வாகிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த சில தினங்களாக 5பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கடன் சங்கத்தில் தெற்குகோனார்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது விவசாய பணிகளுக்காக நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நான்கு முறை 29 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து 62 ஆயிர ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 40 கிராம் அளவில் வைக்கப்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடி என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, தனக்கு தள்ளபடி ஆகி இருக்கும் என்று நம்பி கடன் சங்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ் கணக்கில் 41கிராமம் இருப்பதால் தள்ளுபடி இல்லை என்று கூறியதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தான் 29 கிராம் தான் வைத்திருப்பதாக கூறி அடகு வைத்த அட்டைகளை
காண்பித்த போதும் 41 கிராமம் தான் கணக்கில் உள்ளது என்று கடன் சங்கத்தினர் கூறியுள்ளனர். அப்படி என்றால் தனது கணக்கில் எவ்வளவு கடன் உள்ளது என்று கூறுங்கள் அதனை செலுத்தி விடுகிறேன், 41 கிராமம் நகையை திருப்பி தாருங்கள் என்று விவசாயி வெங்கடேஷ் கேட்டுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சங்க நிர்வாகிகள் கணக்கில் தான் 41 கிராம் உள்ளது. ஆனால் நகை 29 கிராமம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதை வேண்டும் என்றால் பணம் கட்டி திருப்பி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இல்லையென்றால் கோவில்பட்டியில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுங்கள் அப்புறம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதையெடுத்து கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால் வெங்கடேஷ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் பதில் அளித்துள்ளார். அதற்கு
பின்னரும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் கயத்தார் காவல் நிலையத்திலும் வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார்.
இதே போன்று அதே கிராமத்தினை சேர்ந்த முனியசாமி என்பவர் 9 கிராமம் தங்க நகை அடகு வைத்த நிலையில் அவருக்கும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று இது குறித்து கேட்டதற்கு, அவருடைய மகளும் இந்த சங்கத்தின் கடன்பெற்றதாக கூறியுள்ளார்; அவருடைய மகளுக்கு திருமணமாகி அவர் கணவருடன் தனியாக வசித்து வருவதாகவும், தனித்தனி ரேசன் கார்டு இருப்பதாவும், மேலும் தனது மகள் பணம் கட்டி நகைகளை திருப்பிய நிலையில் தனக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக விவசாயி வெங்கடேஷ் உறவினர் முத்துப்பாண்டி என்பவர் கூறுகையில் செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், வைத்த நகைகளை விட அதிக நகை வைத்திருப்பதாக கூறி தள்ளபடி செய்ய மறுக்கின்றனர்.
நகையை திருப்பி கொள்கிறோம் 41 கிராமம் நகையை தாருங்கள் என்றால் அதற்கும் தர மறுக்கிறார்கள். இப்போது சங்கத்தில் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கோவிந்தராஜ் ஏற்கனவே சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டவர். தற்பொது பொறுப்பில் இருக்கிறார்.
இப்பிரச்சினை தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், தள்ளுபடி செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், 10,000 ரூபாக்கு ரூ 1000 கமிஷன் கேட்கும் நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள முனியசாமி கூறுகையில் நகை தள்ளுபடி செய்ய கமிஷன் கேட்டதாகவும், நான் தரவில்லை என்பதால் தகுதி இருந்தும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியலை கேட்டாலும் தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளார்(பொறுப்பு) கோவிந்தராஜிடம் கேட்ட போது கணக்குகளை பதிவு செய்யும் போது தவறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், வெங்கடேஷ் பிரச்சினை தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரிய அளவு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், நகைக்கடன் யாரூக்கு எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் எதுவும் அலுவலகத்தில் ஒட்டவில்லை என்றும், அதனை கேட்டாலும் தர மறுப்பதாகவும், எனவே முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.