உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிற்கும், ரஷ்ய ராணுவ தளபதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளாது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் ராணுவத்தின் அதிரடி பதிலடியில், ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை சற்றும் எதிர்பார்க்காத புதின், ரஷ்ய ராணுவ தளபதிகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேட் பெடிங்பீல்ட் கூறியுள்ளார்.உக்ரைன் ராணுவத்தின் செயல் திறன்கள், பலம் பற்றி தவறான தகவல்கள் அளித்து, தம்மை திசை திருப்பியதாக, ரஷ்ய ராணுவ தளபதிகள் மற்றும் ஆலோசகர்களுடன் புதினுக்கு கருத்து முரண்பாடுகள், மோதல் போக்குகள் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளினால், ரஷ்ய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது புதினுக்கு சிக்கலை அதிகரிக்கச் செய்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான முற்றுகையை நிறுத்துவதாக ரஷ்யா சமீபத்தில் அறிவித்திருந்தும், அங்கு போர் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.