மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டு வளர்ப்பு துறையின் சார்பில் சிறந்த முறையில் பட்டு வளர்ப்பு மேற்கொண்டுவரும் முதல் மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் ரொக்க தொகையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளது,
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த முறையில் பட்டு புழு வளர்ப்பு மேற்கொண்டு வரும் பட்டு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்டு வளர்ச்சித் துறையின் மூலமாக சிறந்த மூன்று பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டது.
அதன்படி 2021-2022ம் ஆண்டுக்கான மாநில திட்டம் மூலமாக மயிலாடுதுறை மாவட்ட பட்டு விவசாயிகளான குத்தாலத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் ரொக்க தொகையும், முடிதிருச்சம்பள்ளியை சேர்ந்த ராஜராஜன் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம் ரொக்க தொகையும், மன்னம்பந்தல் விவசாயி அகிலா என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்க தொகையும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ரங்கபாப்பா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.