சீர்காழி அருகே திருமுல்லைவாசல் – கீழமூவர்க்கரை உப்பனாற்றில் 12 ஆண்டுகளாக பாலம் கட்டி முடிக்கப்படாததால் அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சீர்காழி அருகே கடற்கரை மீனவ கிராமங்களான பழையார், புதுப்பட்டினம், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓளை கொட்டாயமேடு, தாண்டவன் குளம், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன.
மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலிலிருந்து பிடித்து வரும் மீன்களை விற்பனைக்காக நாகப்பட்டினம் கொண்டு செல்ல பழையார், திருமுல்லைவாசல் ஆகிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்கரை ஓரம் சாலை வசதிகள் இல்லாததால் சீர்காழி வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தவிர்க்கும் வகையில் திருமுல்லைவாசல்-கீழமூவர்க்கரை இடையே உள்ள உப்பனாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் திருமுல்லைவாசல் உப்பானற்றில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை பக்கவாட்டு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் அந்தரங்கத்தில் பாலம் தொங்கிய நிலையில் உள்ளது.
இந்த பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுநாள்வரை பாலத்தின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறுகையில், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விரைவாக நாகப்பட்டினம் கொண்டு சென்று விற்பனை செய்ய திருமுல்லைவாசல்-கீழமூவர்க்கரை உப்பானற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு விரைவில் இணைப்புச் சாலை அமைத்துத் தரவேண்டும்.
தற்போது சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள சீர்காழியை கடந்துதான் நாகப்பட்டினத்திற்கு மீன்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே அரசு உடனடியாக திருமுல்லைவாசல் உப்பனாற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலை அமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.