கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 4 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண மொத்தம் 18 மேஜைகள் போடப்பட்டு இருக்கும்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முகவர்கள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை அவசியம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் பணியில் 3,600 பேர் ஈடுபட உள்ளனர். இது தவிர சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்களும் பணியில் இருப்பார்கள். வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அன்று முழு ஊரடங்கு என்பதால் அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரக்கூடாது. முடிவுகள் சுற்றுவாரியாக அறிவிக்கப்படும். ஒலி பெருக்கி, தகவல் பலகையில் குறிப்பிடப்படும்.இந்த முறை வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் டி.வி.யில் வாக்கு எண்ணிக்கை முடிவு விவரம் உடனுக்குடன் ஒளிபரப்பப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி, அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.