நாகப்பட்டினம், கல்வி கட்டணம் உயர்த்தியை கண்டித்து நாகையில், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி கட்டணம் உயர்த்தியதை கண்டித்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு, திடீரென கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு கட்டணம், பருவ கட்டணம், மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கான கட்டணம், மாற்றுச் சான்றிதழ் கட்டணம், பட்டம் பெறுவதற்கான கட்டணம் உள்ளிட்ட கல்வி கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.