0 0
Read Time:3 Minute, 15 Second

வெளிப்பாளையம், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதால் காரைக்கால் மீனவர்கள், தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாது என நாகையில் நடந்த 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வருவதை தொடர்ந்து இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள், சிறு தொழில் உள்பட அனைத்து விசைப்படகுகளும் காரைக்கால் மாவட்ட கடல் பகுதியில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். தமிழக கடல் பகுதியில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது.

இதை மீறி தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்தால், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகளை கட்டி இழுத்து வந்து துறைமுகத்தில் நிறுத்த வேண்டும்.

நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் காரைக்கால் மாவட்ட கடல் பகுதியில் சிறு தொழிலுக்கோ, விசைப்படகு தொழிலுக்கோ செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவ சமுதாயத்தை பாதுகாக்க வரி விலக்களிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி, அதிவேக என்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி யாரும் மீன்பிடிக்கக் கூடாது.

பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களில் விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள அதிவேக என்ஜின்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %