குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் பத்மாவதி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் வரவேற்றார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு இ.சி.ஜி., பொது மருத்துவம், மகளிர் குழந்தைகள் மருத்துவம், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, பல் பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, மற்றும் கண், ரத்தபரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள், கீரைகள் மற்றும் விளக்கப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், கொரோனா தடுப்பூசி முகாமும் நடந்தது. இதில் அசிக்காடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை.சங்கர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ. நட்டு வைத்தார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினார்.
Read Time:2 Minute, 13 Second