மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சாமி.கணேசன், பொருளாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வந்த இந்த ரயில்களை சிறப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். ரயில் நிலையத்தில் பயணிகளுடன் தொடர்பில் உள்ள நிலைய அதிகாரி, டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் கொடுப்பவர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களையே பணியமர்த்தப்பட வேண்டும்.
தமிழக ரயில் நிலையங்களில் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றுவதை நிறுத்தப்பட வேண்டும். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உடனடியாக நகரும் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்த வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், காவிரி டெல்டா பாசனதாரர்கள் சங்க தலைவர் கோபிகணேசன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அன்பழகன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.