நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கெடில நதிக்கரையில் காவடி பூஜை நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்தும், வேன் மற்றும் தேர்களை அலகு குத்தி இழுத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக சென்றனர். அப்போது பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை வழிநெடுக மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்று வழிபட்டனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு விநாயகர், பாலமுருகன் வீதி உலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோவிலில் இடும்பன் பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.