பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மன்னார்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கழிவாக அகற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நகராட்சியிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மன்னார்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் மன்னை.சோழராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி துணைத்தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து ஒப்படைத்த மாணவிகளுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர தி.மு.க. செயலாளர் வீரா.கணேசன், வர்த்தக சங்க செயலாளர் ஆனந்த், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.