திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அகரகொத்தங்குடி வாய்க்கால் கரை தெருவில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து கடையை அகற்ற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கிராம மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். சாலை மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட கவுன்சிலர் முகமதுஉதுமான், மாவட்டகுழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், தமிழ்ச்செல்வி, சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பத்மினி, நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுனா மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் பட்டாசு கடையை பூட்டும் வரை சாலை மறியல் தொடரும் என்றனர்.
இதையடுத்து பட்டாசு கடையை தாசில்தார் பூட்டி ‘சீல்’ வைத்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.