மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காத சூழலில், பொதுமக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்ததாக தெரிவித்தார். மேலும், அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறே சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 83% மக்களை வரிவிதிப்பு பாதிக்காது என்பதே உண்மை என குறிப்பிட்ட முதலமைச்சர், தற்போதுள்ள நிதி ஆதாரத்தைக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால், வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என கூறினார்.
மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், மாநில அரசியலில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளின் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.