0 0
Read Time:3 Minute, 53 Second

கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அதன்படி, தாமதமான மற்றும் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் உள்பட பல்வேறுவிதமான வருமான வரி கணக்குகளை இம் மாதம் 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு பல்வேறு விதமான வருமான வரி மற்றும் கணக்குகளைத் தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வரி செலுத்துவோா் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

அதனை ஏற்று, கடந்த மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய 2020-21-ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கான வருமான வரி சட்டப் பிரிவு 5-இன் கீழ் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் பிரிவு 4-இன் கீழ் தாமதமான கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய மே மாதம் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

கடைசி தேதி வரை கணக்கு தாக்கல் செய்யாமல் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதிக்குப் பிறகு சட்டப் பிரிவு 148-இன் கீழ் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவா்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதுபோல, தகராறு தீா்மானக் குழு (டிஆா்பி) ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்வதற்கும், வருமான வரித் துறை ஆணையரிடம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் மே மாதம் 31 வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நங்கியா அண்டு கோ எல்எல்பி பங்குதாரா் ஷைலேஷ் குமாா் கூறுகையில், ‘பல்வேறுவிதமான வருமான வரி கணக்குகள் தாக்கலுக்கு மட்டுமன்றி, 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியான 2019-20-நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கும் மத்திய அரசு சலுகை அளித்திருக்கிறது. இது வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய நிவாரணமாகும். இதன்மூலம், வரி செலுத்துவோா் தங்களுடைய வருமான வரி கணக்குகளை மின்னணு முறையிலேயே வருகிற 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கரோனா பாதிப்பு நிலைமை அடுத்த இரண்டு வாரங்களில் மேம்படவில்லை எனில், இந்தக் கால அவகாசத்தை அரசு மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்றாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %