மயிலாடுதுறையில் பொதுமக்கள் எதிர்ப்பு எதிெராலியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை திரும்ப எடுத்துக்கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே, உள்ள நீடூர் வை.பட்டவர்த்தி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ராட்சத குழாய்களை இறக்கி வைப்பதற்கான பணிகளை கடந்த வாரம் தொடங்கியது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வந்தது.
இந்த குழாய்களை அப்புறப்படுத்தக் கோரியும், இந்த இடத்தில் எந்த திட்டப்பணிகளையும் தொடங்கக்கூடாது என்று கூறி நாம் தமிழர் கட்சி, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்புக்கு பணிந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இறக்கி வைத்திருந்த ராட்சத குழாய்களை திரும்ப கனரக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.