திருவெண்காடு அருகே, மங்கைமடம்-கீழமூவர் கரை சாலையில் குறவளூர் என்ற இடத்தில் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வாய்க்காலின் குறுக்கே சிறு பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு, மறுபாதியில் பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அந்தப் பாலத்தை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமப்படுகின்றனர்.
மேலும், ஒரு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் முழுமையாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியை கடப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், இந்த சிறு பாலம் வழியாக தான் தென்னம் பட்டினம், கோனியம்பட்டினம், கீழ மூவர் கரை மற்றும் மேல மூவர் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த பாலப்பணி இன்னும் முடிவடையாமல் இருப்பதால் மேற்கண்ட பகுதிக்கு செல்லும் ஒரே அரசு பஸ்சும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பாலப்பணியை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.