0 0
Read Time:6 Minute, 3 Second

சேலம் மாவட்டம், புத்திர கவுண்டன்பாளையத்தில், உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்து மலை முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரை அடு்த்த புத்திர கவுண்டன்பாளையத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்துமலை அடிவாரத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திருப்பணி, 6 ஆண்டுகளாக பிரமாண்ட முருகன் சிலை வடிவமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் இந்த பணி நிறைவடைந்த நிலையில் முருகன் சிலைக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் உள்ள 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை தான் இதுவரை உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என பிரசித்தி பெற்று வந்தது.

இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கோவிலை வடிவமைத்த ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் சிலையையும் வடிவமைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 146 அடி உயரம் கொண்ட இந்த முருகன் சிலை தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

ஆத்தூர் தொழில் அதிபரும், முருக பக்தருமான முத்து நடராஜன், மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று வந்த நிலையில், அதேபோல மிக உயரமான முருகன் சிலையை சேலம் மாவட்டத்தில் நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் இந்த கோவிலை மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க நினைத்து திருப்பணியை தொடங்கினார்.

அதன்படி முத்து நடராஜனை தொடர்ந்து அவருடைய மகன் ஸ்ரீதர் கோவிலை தற்போது கட்டி முடித்துள்ளார். திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த பிரமாண்ட 146 அடி உயர முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த முருகன் சிலையில் கையில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது. பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து நேற்று காலையில் 4-ம் கால யாகபூஜை நடந்தது.

காலை 9 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனையும், 9.30 மணிக்கு கடகங்கள் புறப்பாடும் நடந்தது. பின்னர் 10.30 மணியளவில், உலகிலேயே மிகப்பெரிய தமிழ் கடவுள் முருகன் மற்றும் கணபதிக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கலசத்தின் மீது தீர்த்தம் ஊற்றினர்.

இந்த கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் முருகப்பெருமானுக்கு கிரீடத்தின் மீது ரோஜா மலர்கள் தூவப்பட்டன. மேலும் தெளிப்பான்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். புத்திரகவுண்டன் பாளையம் ஊரே அதிரும் வகையில் இந்த விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, திருக்கைலாய பரம்பரை ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், ஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிய பரமாச்சாரிய சாமிகள், வேலூர் ரத்தினகிரி சாமிகள், சிலுவை ஆதீனம், குமரகுரு சாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.

பின்னர் மாலை 6 மணியளவில் சாமி திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் முத்துமலை முருகன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %