மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் 50 கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அரசு நிர்ணயித்துள்ள காலத்துக்குள் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். அதேபோல் புதிதாக கட்ட வேண்டிய வீடுகளுக்கான கட்டுமான பணியையும் உடனடியாக தொடங்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித்சிங்(வருவாய்), பவன்குமார் ஜி.கிரியப்பனவர் (வளர்ச்சி), மேல் புவனகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், ராஜசேகர், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்ராஜ், விமலா மற்றும் ஒன்றிய பொறியாளர்கள்,
மேற்பார்வையாளர்கள், அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேல் புவனகிரி தலைமை கணக்கர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.