திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள உதவும் இளநீர், மோர், குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பொதுமக்கள் நாடிச்செல்கின்றனர்.
உடல் நலத்தை காக்கும் சிறப்புமிக்க இயற்கை உணவான பனை நுங்கினையும் கோடை காலத்தில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். எந்தவித உரங்கள் இன்றி இயற்கையாக விளைகின்ற பனை நுங்கு உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத பாரம்பரிய உணவு பொருளாக விளங்குகிறது.
நுங்கை போல பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மட்டை முதல் கீற்றுகள் வரை அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. பனை விசிறி கோடைக்கு ஏற்ற குளிர்ந்த காற்றை தருகிறது. அதேபோல பனங்கீற்றுகள் மூலம் வீட்டு கூரைகள் வேயலாம். பனை நுங்கு சாப்பிடுவதன் மூலமாக சுண்ணாம்பு, கால்சியத்துடன், புரோட்டின் சத்தும் கிடைக்கிறது. கோடை காலத்தில் இது உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திருவாரூர் பகுதிக்கு நுங்கு வரத்து அதிகரித்து உள்ளது. குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் இதை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.