வழக்கு விசாரணையின்போது ஆஜராகாததால் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சீர்காழி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொது இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகியான ரவி என்பவர் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சீர்காழி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணையின்போது ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் 3 முறை இன்ஸ்பெக்டர் சந்திரா ஆஜராகாததால் நீதிபதி அலெக்ஸ்ராஜ் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
வருகிற திங்கட்கிழமைக்குள் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகவில்லையென்றால் ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வாரண்டு பிறப்பிக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.