திருக்கடையூர், இந்த ஆண்டு பருவமழை பெய்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கனோடை, கிடங்கல், மாமாகுடி, பிள்ளைபெருமாநல்லூர், வேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.
நிலக்கடலை பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், போதிய மகசூல் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிள்ளைபெருமாநல்லூரை சேர்ந்த விவசாயி சுந்தரவடிவேல் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால், குறைவாக பயிரிட்டு வந்தோம்.
இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்ததால் சுமார் 250 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளோம். பயிரிடப்பட்ட 90 நாட்களில் நிலக்கடலை அறுவடை செய்யப்படும்.
நிலக்கடலை சாகுபடியை பொறுத்தவரை விதைப்பு, களை எடுத்தல், மண் அணைத்தல், விதை கடலை உடைத்தல் என பல வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பாத்தோம்.
ஆனால் வெயிலின் தாக்கம், செடிகள் கருகி போகுதல் போன்ற காரணங்களால் போதிய மகசூல் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.