0 0
Read Time:3 Minute, 6 Second

கடலூர் அருகே, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர் அருகே, உள்ள சிப்காட் பகுதியில் டாஸ்மாக் மொத்த குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மதுபான பெட்டிகளை ஏற்றி, இறக்கும் விதமாக ஒப்பந்த தொழிலாளர்களாக 65 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் இவர்களது வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஒரே கணக்கில் கொண்டு வருவதற்கு, ஒப்பந்தக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகமும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத்தின் சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றவில்லை.

மேற்கூறிய இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று திடீரென, சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குடோன் அருகே அவர்கள் தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் முருகன், செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாவட்ட இணை செயலாளர் சுப்புராயன் மற்றும் மோகன், சரவணன், முத்து கிருஷ்ணன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் டாஸ்மாக் குடோனுக்கு வெளியூர்களில் இருந்து லாரிகளில் வந்த மதுபான பெட்டிகள் இறக்கும் பணி மற்றும் சில்லரை விற்பனை கடைகளுக்கு மதுபான பெட்டிகளை ஏற்றி அனுப்பும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மாலையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %