சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது, தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுசெயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 என்ற குறைவான தொகையே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே , இவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, வாரவிடுமுறை , அரசு விடுமுறை , இலவச சீருடை , இலவச பஸ் பயண அடையாள அட்டையை தமிழக அரசு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.