சென்னை, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதையும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் நினைவுகூரும்வகையில், ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தபோது எருசலேம் நகர வீதியில் கழுதையின்மேல் ஊர்வலமாக வந்த நேரத்தில், மக்கள் அவருக்கு குருத்தோலைகள் உள்ளிட்ட இலைகளைப் பரப்பி, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா…’ என்று வரவேற்றனர் என பைபிளில் கூறப்பட்டு இருக்கிறது.
அந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக குருத்தோலை ஞாயிறு இந்த தவக்காலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தன்று குருத்தோலைகளை கையில் ஏந்தி, ஊர்வலமாக சென்று, தேவாலயத்தில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள்.
சென்னை, அடையாறில் உள்ள ஏசு அன்பர் ஆலயத்தில் பாதிரியார் எம்.சந்திரசேகர், தலைமையில் ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி, ஓசன்னா பாடலை பாடி ஊர்வலமாக வந்தனர்.
சென்னை, மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று சிறப்பாக நடந்துமுடிந்தது.
வருகிற 15-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படும். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில், மும்மணி நேர தியான ஆராதனை நடக்கும். அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந் தேதி) இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் கொண்டாடப்படும்.