கும்பகோணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் என்று கும்பகோணத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.
கும்பகோணத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ஐயாராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப. தமிழழகன் வரவேற்றார். மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணம் என்ற பெயரை கேட்டாலே முன்னாள் அமைச்சர் கோசி.மணி தான் நினைவுக்கு வருவார். கும்பகோணம் பகுதியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு அவர் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். கும்பகோணத்தில் கொசு தொல்லையை ஒழிக்க நிதி கேட்டு போராடியவர்.
பட்ஜெட் என்பது பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாகும். தமிழக பட்ஜெட்டில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 3.60 சதவீதம் பற்றாக்குறை இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி மானியம் கொடுக்கப்பட்டதாலேயே இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையும் 6 மாத காலத்தில் சரி செய்யப்படும். தமிழகத்தில் மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் நமது தமிழக முதல்-அமைச்சரின் ஆளுமைத்திறன் என்பதை நாம் மறுக்க முடியாது. தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு முன்பு தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைத்து எனது தலைமையில் சென்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த வகையில் சுமார் 2 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே 505 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த திட்டங்கள் தவிர்த்து கொரோனாவில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருவர் இறந்திருந்தால் ரூ.3.5 லட்சம், குடும்பத்தில் ஒருவர் இறந்தால் ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பற்றி பேச வேண்டியது அவசியம். பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். விலைவாசி உயரும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படையும் நிலை உருவாகும். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் போராடினோம்.
உலக வர்த்தக அமைப்பு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்திற்கு மேல் விதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நமது நாட்டில் ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் தொடங்கி 28 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் 120 நாடுகளில் அதிகபட்சமாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது நமது இந்தியாவில் தான். கடுமையான விலை உயர்வினால் நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் தான். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.