கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவா் முத்துசாமி மகன் சக்திவேல் (வயது 42). இவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்குமிடத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தமயந்தி (40) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சக்திவேல் நேற்று முனதினம் தனது குடும்பத்தினரிடம் விருத்தாசலத்தில் உள்ள நண்பர்கள் சிலரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மாயமான சக்திவேலை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாயமான சக்திவேல் வேப்பூர் அடுத்த தே.புடையூர் பெட்ரோல் பங்க்கு அருகே உள்ள சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேப்பூர் போலீசாருக்கும், சக்திவேல் குடும்பத்தினருக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அங்கு வந்த குடும்பத்தினர் பிணமாக கிடந்த சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தமயந்தி வேப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே ஊழியர் பிணமாக கிடந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.