கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
10-ம் வகுப்பு தோல்வி, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து, 31.3.2022 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந் தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்சி. நர்சிங் போன்ற தொழிற்பட்ட படிப்புமுடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் அடுத்த மாதம் (மே) 31-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.