சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களை சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என துணை மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தற்போது நிதி பற்றாக்குறை இருப்பதால், 2 மாதத்திற்குபின், பணியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.