பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். பொருளாளர் ஞானமுத்து, மாவட்ட அமைப்பாளர்கள் ரவி, ரமேஷ், செயலாளர் கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் தங்கம் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து பெண்ணாடம் தர்காவில் பெண்ணுக்குப் பேய் பிடித்ததாக கூறி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தர்காவில், பேய், பிசாசு, பில்லி சூனியம் ஓட்ட தடைசெய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பவுத்த மறுமலர்ச்சி சங்க ஒருங்கிணைப்பாளர் சசி குமார், இந்திய குடியரசு கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, சட்ட விழிப்புணர்வு சங்க தலைவர் பழனி ஆண்டவர் மற்றும் அனைத்து மக்கள் சேவை இயக்க ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.