மயிலாடுதுறையில், வேனில் கடத்திய 2,600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடி விட்டனர்.
பின்னர் அந்த வேனில் சோதனையிட்டதில் அதில் 55 பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 2,600 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த மது பாட்டில்கள் மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் மது பாட்டில்களை கடத்திய வேன் டிரைவர் புதுச்சேரி மாநிலம, காரைக்கால் அருகே உள்ள பூவம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த சண்முகம்(வயது 53), காரைக்கால் வரிச்சிகுடி சோனியாகாந்தி நகரை சேர்ந்த அறிவழகன் மகன் கார்த்திக் என்கிற திலிப்குமார்(22) ஆகிய 2 பேரை பிடித்து மயிலாடுதுறை போலீசில் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சண்முகம், திலீப்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பியோடிய காரைக்கால் பகுதியை சேர்ந்த மாதவன், ‘பாம்’ ராஜா ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.