விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படியும், கடலூர் மாவட்ட கலெக்டா் உத்தரவின் பேரிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் செயல்படும் மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்து, உர விற்பனையில் விதி மீறல்கள் உள்ளனவா என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், தாசில்தார் சுரேஷ்குமார், வேளாண்மை அலுவலர் அனுசுயா ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனை எந்திரம் மூலம் ஆதார் எண் அடிப்படையில் விற்க வேண்டும் என்றும், இருப்பு பதிவேடு பராமரிப்பு மற்றும் அதன் அடிப்படையில் கிடங்குகளில் பொருளாய்வு, அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்வதை உறுதி செய்தல், விலை விவர பராமரிப்பு, மானிய விலை உரங்களை விவசாயம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துவதை தடுப்பது போன்றவை குறித்து உர விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும்போது விற்பனை ரசீது தவறாமல் வழங்க வேண்டும்.
விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக வேறு அங்கக உரங்கள் போன்றவற்றை வாங்க வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் விவசாய பயன்பாட்டுக்கான உரங்களை கொண்டு செல்வதை தடை செய்து, மாவட்ட எல்லைகளை காவல்துறை அலுவலர்கள் உதவியுடன் கண்காணித்து, வாகனங்களை தணிக்கை செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்தும், அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.