தரங்கம்பாடி, ஏப்-13;
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹார ஐதீக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .இதில் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலமாகும். மேலும், அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பெளர்ணமியாக்கி காட்டிய நிகழ்வு நடைபெற்ற தலம் என்னும் சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.
சிவபெருமான் 8 வீரச்செயல்கள் புரிந்த தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலமும் இதுவாகும். இதை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார திருவிழா நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு சித்திரை விழா ஏப்ரல் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 6-ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை மற்றும் மாலையில் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ கால சம்கார மூர்த்தி மகா மண்டபத்திலிருந்து நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி வீர நடனம் தரிசனம் நடைபெற்றது.
இரவு எமசம்காரம் நிகழ்ச்சியில் எமதர்மன் மார்க்கண்டேயரை உயிரைப் பறிக்க பாசக்கயிரோடு துரத்திச் செல்லும் காட்சி மற்றும்
காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வானது, தீவிர சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடையவுள்ள நிலையில், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வந்தபோது, அவர் திருக்கடையூர் கோயிலில் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால், கடும் கோபத்துடன் வெளிப்பட்ட சிவ பெருமான், எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். மேலும், மார்க்கண்டேயர் என்றும் இளமையாக இருக்க அருள்பாலித்தார் என்பது ஐதீகம். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் காலசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.
படவிளக்கம் 1.மார்க்கண்டேயரின் உயிரை பறிக்க வந்த எமன்
- ஸ்ரீ பாலாம்பிகை ,காலசம்கார மூர்த்தி சுவாமிகள் மகா மண்டபத்திலிருந்து நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடன தரிசனம் நடைபெற்றபோது
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.