கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வரவேற்றார்.
இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கையைப் படித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அங்குதன்: கொள்ளிடம் ஒன்றியத்தில் திருமுல்லைவாசல், எடமணல், மாதிரவேளூர், குன்னம், புதுப்பட்டினம், ஆகிய ஊராட்சிகளில் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடக்கும் நிலையில் உள்ளது. அங்கு செவிலியர்களும் இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பகல் மற்றும் இரவு நேரத்தில் டாக்டர், செவிலியர் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அன்பழகன்: கீழமாத்தூர், ஒலையம்புத்தூர், பட்ட விளாகம், ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே 200 மீட்டர் தூரம் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.
சிவபாலன்: ஒன்றியக்குழு உறுப்பினராகி 2½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை உறுப்பினர்களுக்கு அதிக வேலை வழங்கப்படவில்லை. நாணல் படுகை கீழத்தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
செந்தாமரைகண்ணன்: பாலுரன் படுகையில் கிராமத்திலிருந்து பனங்காட்டான் குடி வரை தெற்கு ராஜன் வாய்க்காலில் படித்துறை அமைக்க வேண்டும். மேலும் கீழவாடி கிராம சாலையை சீரமைக்க வேண்டும்.
மணவாளன்: அரசூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் அங்கு பஸ் நிறுத்தம் மற்றும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய ஆணையர் – கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு மயிலாடுதுறை கலெக்டர் மற்றும் சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஓலையம்புத்தூர், கீழமாத்தூர் ஊராட்சியில் உள்ள கிராம சாலைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குன்னம் கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் உடைப்பு ஏற்பட்டுள்ள குழாய்களை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒன்றியக்குழு தலைவர்: கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 15-வது வது மாநில நிதிக்குழு மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், ஆத்மா திட்டஅலுவலர் அரவிந்த், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.