மீன்பிடி தடைகாலம் நாளை தொடங்குவதால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பரங்கிப்பேட்டை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜீன் மாதம் 15-ந் தேதி வரை மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க இருப்பதை அடுத்து நேற்றுமுன்தினம் முதல் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
அதேபோல் கிள்ளை, முடசல் ஒடை, சின்னவாய்க்கால் பட்றையடி, அன்னங்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையோரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை காண முடிந்தது.
முடசல்ஓடை பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீன்பிடி தளம் அருகில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மார்க்கெட்டுகளுக்கு மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.