கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 120 ஏக்கர் பரப்பளவில் எள் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்தார்.
கடலூர், தென்மேற்கு வங்கக்கடல், அதனைஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
கடலூரில் நேற்று அதிகாலையிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இது தவிர குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 29.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-குப்பநத்தம்- 14.6, விருத்தாசலம்- 11.1, பண்ருட்டி – 8, கீழசெருவாய் – 6, குறிஞ்சிப்பாடி- 5, பெலாந்துறை- 3, காட்டுமன்னார்கோவில்- 2.4, மே.மாத்தூர் -2, சேத்தியாத்தோப்பு -1.4,
இதற்கிடையில் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டு இருந்த எள் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பூத்து காய்க்கும் நிலையில் இருந்த எள் செடிகளில் தண்ணீர் தேங்கியதால், பூக்கள் அனைத்தும் பழுத்து கீழே விழுந்து வருகிறது. செடிகளும் அழுகி வீணாகி வருகிறது.
அதாவது, குறிஞ்சிப்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, பொன் வெளி, அயன்குறிஞ்சிப்பாடி போன்ற பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சுமார் 200 ஏக்கர் எள் வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர் மாதவன் கூறுகையில், குறைந்த நாட்களில் அதிக மகசூல் எடுத்து லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் சம்பா அறுவடை முடிந்த பிறகும், மணிலா அறுவடை செய்த வயல்களிலும் எள் சாகுபடி செய்திருந்தனர்.
அந்த வயல்களில் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையாலும் எள் பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியதோடு சரி, இது வரை நிவாரணம் வழங்கவில்லை. அதேபோல் விட்டுவிடாமல் தற்போது பாதிக்கப்பட்ட எள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
வேளாண்மை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மாவட்டம் முழுவதும் 560 ஏக்கர் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அதில் தற்போது பெய்து வரும் மழையால் 120 ஏக்கர் எள் வயல்களை தண்ணீர் சூழ்ந்து நிற்பதாக கணக்கெடுக்கப்பட்டது. அயன்குறிஞ்சிப்பாடி பகுதியில் 62 ஏக்கர் சாகுபடி செய்த எள் பயிரில் 24 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டது. தண்ணீர் வடிந்த பிறகு தான் மற்ற இடங்களில் பாதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்றார்.
நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, வெள்ளப்பாக்கம், காராமணிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஒடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
மேலும் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருவதால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றதால் கடும் துர்நாற்றம் வீசியதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குடை பிடித்தபடி சென்றதையும் காணமுடிந்தது. கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் அவதியுற்று வந்த பொதுமக்கள் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்ததை அடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.