சென்னை, தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி 16-ந்தேதி (நாளை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை தேவைப்படும் பட்சத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
- காமராஜர் சாலையில் இருந்து அண்ணா சாலை மற்றும் ஈ.வெ.ரா. சாலை செல்பவர்கள், உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடது திரும்பி வாலாஜா சாலை, அண்ணாசாலை, பல்லவன் சாலை வழியாக ஈ.வெ.ரா. சாலையை அடையலாம்.
- ராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், வடக்கு கோட்டை பக்க சாலை, முத்துசாமி சாலை, ஈ.வெ.ரா. சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
- ஈ.வெ.ரா. சாலையில் இருந்து போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்.எம்.சி.யில் வலது புறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
- அண்ணாசாலையில் இருந்து ராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈ.வெ.ரா. சாலை, முத்துசாமி சாலை, ஆர்.ஏ.மன்றம் வழியாக ராஜாஜி சாலையை அடையலாம்.
வாகன அனுமதி அட்டை (பாஸ்) வைத்திருப்பவர்கள் தீவுத்திடலின் கதவு-3 மற்றும் கதவு-8 வழியாக வந்து வாகனங்களை ஒதுக்கப்பட்டுள்ள மைதானத்தில் நிறுத்தி கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் தீவுத்திடலின் அண்ணாசாலை கதவு-9 வழியாக சென்று வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கு வரும் பஸ்கள் கடற்கரை உள்வட்ட சாலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வாகனங்களை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் சாலையின் ஓரத்திலோ, நடைமேடையிலோ வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.