சென்னை, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவ்வப்போது கடலில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழிகாட்டுதல் படி ‘‘மெரினா உயிர் காக்கும் படை’’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த உயிர் காக்கும் பிரிவில் கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், இந்திய கடலோர காவல் படை மற்றும் தன்னார்வலர்கள் அங்கம் வகிக்கின்றனர். கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மெரினாவில் கடந்த வாரம் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்தநிலையில், நேற்று 2-வது கட்டமாக மெரினா உயிர் காக்கும் படையில் சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு காவலர் நலன் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் தலைமை தாங்கினார். கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல், சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கடலில் குளிக்கும் போதும், விளையாடிக்கொண்டிருக்கும் போதும் கடல் அலையில் சிக்கி தத்தளிப்பவர்களை சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் ‘‘லைப் பாய் மற்றும் ரெஸ்கியூ டியூப்’’ மூலம் மீட்பது, அவர்களுக்கு முதல் உதவி அளிப்பது போன்ற ஒத்திகையை வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
மேலும், கடலின் ஆழப்பகுதியில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பவர்களை ‘ஸ்டேண்ட் அப் பெடலிங்’ மூலமாகவும், கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் படகு பழுதாகி சிக்கி தவிப்பவர்களை அதிநவீன படகு மூலமும் மீட்டு கரைக்கு கொண்டுவருவது போன்ற சாகச ஒத்திகையும் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது:-
மெரினாவில் ஒவ்வொரு நாளும் கடல் அலையில் சிக்கி 2 அல்லது 3 பேர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க மெரினா உயிர் காக்கும் படை தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற சிறப்பு போலீசாரும் உள்ளனர். இந்த பிரிவு தொடங்கப்பட்ட 6 மாதங்களாக உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
கடந்த 5 மாதங்களில் கடலில் சிக்கி தத்தளித்த 24 பேரை இந்த உயிர் காக்கும் படை மூலம் காப்பாற்றி உள்ளோம். ஒவ்வொரு நாளும் இந்த பிரிவு மேலும் மெருகேற்றப்பட்டு பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக, கூடுதலாக அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மெரினாவில் 100 சதவீத உயிரிழப்பை தடுப்பதே எங்களது இலக்கு. பொதுமக்களும் கடற்கரைக்கு வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வீரர்களின் சாகசங்களை நேற்று மெரினா கடற்கரைக்கு தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.