சீர்காழி, கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
சீர்காழி அருகே, மருவத்தூர் கிராமத்தில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயிறு உள்ளிட்ட பயிறு வகை பயிர்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை மழையில் உளுந்து, பயறு, பருத்தி, எள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர்கள் வயலிலேயே முளைக்கத் தொடங்கிவிட்டன. காவிரி டெல்டாவில் 10 லட்சம் ஏக்கரில் கோடை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உளுந்து பயிர் 50 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல பருத்தி, எள்ளு, நிலக்கடலை போன்ற பயிர்களும் 50 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் கோடை பயிர்கள் மூலம் ஓரளவிற்கு வருவாய் ஈட்டலாம் என்று நினைத்த விவசாயிகளுக்கு, மழையால் உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு விரைந்து உயர்மட்ட குழுவை காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது விவசாய சங்க தலைவர்கள் விசுவநாதன், சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.