மயிலாடுதுறை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, `முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், பெண்கள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விருதிற்கு கடந்த நிதியாண்டில் (2021-2022) செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
ஊரகம் மற்றும் நகர்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப்பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், வயது முதிர்ந்தோருக்கான கல்வித்திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களின் நலன், பட்டியல் இனத்தோர், மலைவாழ் மக்கள் நலன், தேசிய நலன், சாரணர் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் உள்ளூர் தேவைகளுக்காகவும், முக்கிய நோக்கங்களுக்காகவும் பணிபுரிந்த விவரங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in-ல் மே மாதம் 10-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.