திருவெண்காடு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் பதர்நிஷா(வயது 72). இவர், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார். கொல்லாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கிருஷ்ண சந்தர்(36) என்பவர் காரை ஓட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டது. பின்னர் காரிலேயே அமர்ந்து பதர்நிஷா மற்றும் கிருஷ்ணசந்தர் ஆகிய இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சீர்காழி நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி:
இ்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பதர்நிஷா, கிருஷ்ணசந்தர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, திருவெண்காடு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நாகரத்தினம் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காரை உடைத்து மீட்டனர்:
காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க முடியாததால் சம்பவ இடத்திற்கு பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் காரை உடைத்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்க முடிந்தது.
பின்னர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோகிதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இ்து குறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.