திட்டக்குடி அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே கொட்டாரம், ஆவினங்குடி, வையங்குடி, செங்கமேடு, நாவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனைக்காக கொட்டாரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக வைத்திருந்தனர்.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சாக்கு இல்லை எனக்கூறி அந்த நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதுடன் நெல்மணிகள் முளைக்க தொடங்கியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி ஆவினங்குடியில் விருத்தாசலம் – திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.