கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சீர்காழியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாதரகுடி காமராஜ், முன்னாள் மாவட்ட நிர்வாகி ஸ்டாலின், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன் வரவேற்றார்.
இதில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் விஜயரங்கன், மாநில கிறிஸ்தவ பேரவை நிர்வாகி எருக்கூர் தாஸ் ஆகியோர் பேசினர்.
கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயிறு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சீர்காழி பகுதியில் உள்ள பாசனம் மற்றும் வடிகால்களை முன்கூட்டியே தூர்வார வேண்டும். சீர்காழி உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர செயலாளர் இனிய தமிழன், கட்சி நிர்வாகிகள் சங்கர், மணிமாறன், டேவிட் வசந்தராஜ், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.