சென்னையில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 2 டாக்டர்கள் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் பணம் கொள்ளை!!
‘டிஜிட்டல்’ முறையில் பண பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறுவதால் ‘ஆன்லைன்’ மோசடிகளும் அதிகம் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் ஆதம் தெருவை சேர்ந்த கவிதா (வயது 43) என்ற பெண்ணின் செல்போன் எண்ணுக்கு, ‘உங்களது பான் கார்டு காலாவதியாகிவிட்டது. புதிய பான் கார்டு எண் வேண்டுமென்றால் வங்கி கணக்கு விவரங்களை ‘அப்டேட்’ செய்யுங்கள் என்றுக்கூறி இணையதள முகவரியுடன் குறுந்தகவல் வந்துள்ளது.
இதனால் பதறிப்போன அவர், குறிப்பிட்ட இணையதள முகவரியில் வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் பணம் மாயமானது.
இதே பாணியில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரமும், டாக்டர் செந்தில் வடிவேலு என்பவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும் பணம் திருடப்பட்டது. இந்த நூதன மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மயிலாப்பூர் ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் விஜய ராகவேந்திரா என்பவரிடம் தனியார் வங்கியில் இருந்து பேசுவது போன்று நடித்து ஓ.டி.பி. எண் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரம் திருடப்பட்டது. இது மோசடி தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘ஆன்லைன்’ மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்களை அளிக்க கூடாது என்று போலீசார் தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்களின் அஜாக்கிரதை ‘ஆன்லைன்’ மோசடி கும்பலுக்கு குதுகலமாக அமைந்துள்ளது.
எனவே பொதுமக்கள் உஷாராக இருந்தால் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.