கடலூர், தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. ஆனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், பெலாந்துறை, காட்டுமயிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை அளித்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார் கோவிலில் 59.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.